December 4, 2022

நினைவில் நின்றவை..(11)

கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா

# SC relief for U.P. CM in hate speech case

The Supreme Court on Friday dismissed a petition against a decision of the Allahabad High court which upheld the Uttar Pradesh government’s refusal to grant sanction for prosecuting Chief Minister Yogi Adityanath in a 2017 hate speech case.

நீதிமன்றங்கள் தரும் தீர்ப்புகளைப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது என்பதற்கான உதாரணமாக மேற்கண்ட வாக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம்.. ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் எனில், தமிழிலும் ஒரே வாக்கியமாக மொழிபெயர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இரண்டு மூன்று வாக்கியங்களாக உடைத்தால் மொழிபெயர்ப்பினை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். இப்படி மொழிபெயர்க்கலாம்.. 

“2017-ம் ஆண்டில் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசிய ஒரு வெறுப்புப் பேச்சிற்காக அவர் மீது வழக்கு தொடுக்க ஒருவர் முனைந்தபோது, அதற்கு உ.பி. அரசு அனுமதி கொடுக்க மறுத்தது.

அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது அலகாபாத் உயர்நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது. அதன் மீது மேல்முறையீடு செய்தபோது அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

 நல்ல வேளையாக “SC relief for U.P. CM in hate speech case”  என்று இந்தச் செய்திக்கு தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. உ.பி. முதலமைச்சருக்கு ஆதரவான தீர்ப்பு என்று தலைப்பிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது!

ஆகாய விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகு ஒருவர் அருகில் இருந்தவரிடம் “கீழே பாருங்க. மனுஷங்கல்லாம் எப்படி எறும்பு மாதிரி தெரியறாங்க பாருங்க” என்றார்.

நல்லாப் பாருங்க.. அதெல்லாம் எறும்புகதான். பிளேன் இன்னும் கிளம்பலை என்றார் மற்றவர்!

1970-களில் கல்லூரி ஆசிரியர்கள் மெமோ வாங்குவது என்றாலே பயப்படுவார்கள். யாராவது மெமோ வாங்கிவிட்டால் அவருடன் மற்றவர்கள் பேச மாட்டார்கள். அவருடன் பேசியதற்காக தனக்கும் மெமோ கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்!

முன்பு பி.கே. ராஜன் என்று ஒரு மூட்டா தலைவர் இருந்தார். மேடையில் பேசும்போது ஆங்கிலத்தில் அற்புதமாகப் பேசுவார். 1000 பேர்கள் இருந்தாலும் அத்தனை பேரையும் தன் பேச்சினால் கட்டிப் போட்டுவிடுவார்,  அவர் கிளைக் கூட்டங்களில் பேசும்போது What is a memo? It is after all piece of paper. It deserves just a reply” என்று மெமோ வாங்குவதை சர்வசாதாரணமாகக் கூறுவார். அவர் சொல்வதைக் கேட்டு பல உறுப்பினர்கள் பயம் தெளிந்தார்கள்.

அவர் தலைவராக இருந்த காலகட்டத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வாங்குவதில் ஒரு சில முரண்பாடுகள் இருந்தன. Pay fixation as per college records, Junior getting more pay than senior.. என்பவை சில உதாரணங்கள். கே.சி. நடராஜன் என்ற ஓர் உறுப்பினருக்கு ஊதிய முரண்பாடுகள் சற்று அதிமாகவே இருந்தன. அவரை நாங்கள் கே.சி.என். என்று அழைப்போம். பி.கே.ராஜன் அவரை Think of any anomaly.. K.C.N. will have it” என்று கிண்டல் செய்வார்! மற்றவர்கள் சிரித்து மகிழ்வார்கள்!  

நம்மாள் ஒருத்தன் வெளிநாட்டில் ஒரு  வேலைக்குப் போனான். முதலாளியை அசத்தணும்னு நினைச்சவன் எல்லோரும் ஆறு மணிக்கு ஆபீஸை விட்டு கிளம்பினாலும் இவன் கிளம்ப மாட்டான். நைட் ஏழு மணிவரை வேலை செய்து விட்டுத்தான் வீட்டுக்குப் போவான். சம்பள நாள் வந்தது.  நம்மாள் கூடுதல் நேரம் வேலை செய்ததற்காக முதலாளி  நம்மை பாராட்டுவார் என்று நினைத்துக் கொண்டு முதலாளியின் கேபினுக்குள் நுழைந்தான். முதலாளி  ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து விட்டு அவனை டிஸ்மிஸ் செய்யும் லெட்டரையும் கூடவே கொடுத்திருக்கிறார்.

நம்மாளுக்கு தலை கிறுகிறுத்து விட்டதாம். என்ன சார் இது என்றான் அதிர்ச்சியுடன்.

அவரோ கூலாக யப்பா,  எல்லோரும் ஆறு மணிக்கு முடிக்கிற வேலையை நீ ஏழு மணி வரைக்கும் செய்றே.. .அதனால் நீ இந்த வேலைக்கு டிஸ்குவாலிபைடு. உன் ஒருத்தனுக்காக ஒரு மணி நேரம் லைட் வேறு கூடுதலாக எரியுது. கரண்ட் பில்லும் எகிறுது..

.நீ இந்தியாவுக்கு போய் பிரதமர் வேலை இருந்தா பாரு! அதில் ரெண்டு மணி நேரம் தூங்கினால் போதும்! மீதி நேரம் தப்பு தப்பா வேலை செய்து தொழில் கத்துக்கலாம்! ” என்றாராம்.!

(ஆசிரியர் கேடயம் நவம்பர் இதழில் வெளிவந்த கட்டுரை)